ஈரோடு: கர்நாடக மாநிலத்தில் பருவ மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து கடந்த 8-ந் தேதி முதல் காவேரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதன் காரணமாக கடந்த பத்தாம் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மேடடூர் அணை அதன் முழு கொள்ளவு 120 அடியை எட்டியுள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், கடலூர் உள்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவேரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை பவானி, அம்மாபேட்டை, நெருஞ்சிப்பேட்டை, பிபி அக்ரஹாரம், கருங்கல்பாளையம், கொடுமுடி ஆகிய பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவுறுத்தல் பேரில் இன்று கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரை பகுதியில் வருவாய் துறையினர், வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. காவிரி ஆற்றில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ மீன் பிடிக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: 42-ஆவது முறையாக முழுக்கொள்ளவை எட்டியது மேட்டூர் அணை