உலகமெங்கும் கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவிவருவதால், பொதுமக்களிடையே மிகப்பெரிய பீதி ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் ஒருபகுதியாக, ஈரோடு மாவட்ட நிர்வாகம் பெருந்துறை, பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், கோபி, மொடக்குறிச்சி, தாளவாடி, பவானி சாகர், நம்பியூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், மாட்டுச்சந்தைகள் எனப் பல்வேறு இடங்களை மூட உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, வாரம்தோறும் நடைபெறும் பிரபல ஜவுளி சந்தைகளை வரும் 31ஆம் தேதி வரையில் மூட உத்தரவிட்டது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடைகள், சிறு, குறு நிறுவனங்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன. நாளொன்றுக்கு 25 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளாதாகக் கூறப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் 20 முதல் 50 பேர் வரையில் பணியாற்றும் வணிக நிறுவனங்களை மூட உத்தரவிட்டது. இதனால், தினசரி கூலித்தொழிலாளர்கள் வேலையின்றி அல்லாடுகின்றனர். சிறு, குறு வணிகர்கள் கடை வாடகை உள்ளிட்ட பிரச்னையால் தவிக்கின்றனர்.
இதனால், அவர்களுக்கு, கடன் சுமை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவிக்கும் வணிகர்கள், இதனால் ஏற்படும் இழப்புக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் எனக் கோரிக்கைவைக்கின்றனர்.
இதையும் படிங்க: கோவிட்-19 அச்சுறுத்தல்: நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகள்