ஈரோடு பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் செந்தில்குமாரைப் பிரிந்து அவரது மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். செந்திலின் தாயாரும், சகோதரரும் சென்னையில் வசித்து வருகின்றனர்.
வீட்டில் தனிமையில் இருக்கும் செந்தில்குமாருக்கு சமையல் உதவிக்காக வேலையாள் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். செந்தில் குமார் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அடிக்கடி தேவையில்லாத சிந்தனைகள் ஏற்பட்டு தற்கொலைக்கு முயல்வார் என்றும் கூறப்படுகிறது.
இது போன்ற தற்கொலை முயற்சியால் உயிருக்கு ஆபத்தான நிலையில் பலமுறை அவர் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும், செந்தில்குமாரின் இப்பிரச்னை காரணமாகவே மனைவி இவரை விட்டு பிரிந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் நேற்று (நவ.,5) மதியம் வீட்டிலிருந்து வெளியேறிய இவர் பெரியார் நகர் பகுதியிலுள்ள குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல் நிலைய அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தின் முதல் மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாகக் கூறி மிரட்டினார்.
தொடர்ந்து ஈரோடு மாநகரக் காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருதுறையினரும் உடனடியாக வந்து தற்கொலைக்கு முயற்சித்த செந்தில்குமாரை மீட்டு கீழே அழைத்து வந்தனர். சிறிது நேரத்தில் எவ்வித கவலைகளுமின்றி செந்தில்குமார் வெகு இயல்பாக பேசத் தொடங்கிவிட்டார். இதைக் கண்ட காவல் துறை, தீயணைப்புத் துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக செந்தில்குமாரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரைத் தனியாக விட்டுச் சென்றுள்ள தாய் மற்றும் சகோதரரை ஈரோடு வந்து தங்களைச் சந்திக்குமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
செந்தில்குமாருக்கு போதிய பாதுகாப்புடன் உரிய சிகிச்சை அளித்திட வேண்டுமென அவரது தாய், சகோதரரிடம் வலியுறுத்தயிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:தற்கொலைக்கு முயன்ற இளைஞர்: துரிதமாகச் செயல்பட்டு மீட்ட காவலர்கள்