ஈரோடு மாவட்டம் திண்டல் தனியார் கல்லூரியின் சார்பில் கல்லுாரியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு 'எனது மரம்; எனது வரம்' என்கிற தலைப்பில் மரங்களை வளர்த்து மழையைப் பெருக்ககவும், உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் ஆரோக்கியத்தை பேணிடவும் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர்கள் கலந்துகொண்ட இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டி திண்டல் வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. இப்போட்டியின் போது உடற்பயிற்சிகள் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலம் குடும்பம் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும் என்றும், மரங்களை அதிகளவில் நட்டு வைத்து அதன் மூலம் அதிகளவில் மழையைப் பெறலாம் என்பதால் மரங்களை அதிகம் நட வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்படுத்திடவே இதுபோன்ற மாரத்தான் போட்டிகள் நடத்தப்படுவதாகக் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.