ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள மணிமலை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்தப் பகுதியில் உள்ள சாலை மிகவும் மோசமடைந்து உள்ளது.
இந்தச் சாலையினை சீரமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. இது தொடர்பாக அரசு அலுவலர்களிடம் இப்பகுதிமக்கள் பலமுறை புகாரளித்தும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மேலும், சீரற்ற சாலையினால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகிவருகின்றனர்.
இந்நிலையில், உடனடியாக சாலை வசதி செய்து தரக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சென்னிமலை அரச்சலூர் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவலர்கள், சென்னிமலை பேரூராட்சி அலுவலர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கூண்டில் சிக்கிய சிறுத்தை... பொதுமக்கள் மகிழ்ச்சி!