சத்தியமங்கலம் பகுதியை அடுத்த இக்கரை தத்தப்பள்ளியைச் சேர்ந்தவர் சாஸ்தா மூர்த்தி (50). இவரது மனைவி அமுதா (45). இவர்களின் திருமணமான மகள் பவித்ரா (24), அமுதாவின் தாயார் சித்தம்மாள் (70) ஆகியோர் அங்குள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த வீரமணிகண்டன் என்பவரை, பவித்ரா காதல் திருமணம் செய்துகொண்டார்.
பவித்ராவுக்கும் வீரமணிகண்டனுக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக பவித்ரா, தனது இரு குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
கடந்த 15 நாள்களுக்கு முன்பு வீரமணிகண்டன் பவித்ராவை தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு அழைத்துள்ளார். அதற்கு பவித்ரா மறுக்கவே, அவரை வீரமணிகண்டன் அரிவாளால் வெட்டினார். இதனால் படுகாயம் அடைந்த பவித்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் வீரமணிகண்டன் சிறைக்குச் சென்று, சிறிது நாள்களில் பிணையில் வெளியே வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று (ஆகஸ்ட் 2) இரவு வீரமணிகண்டன் தனது நண்பர்களுடன் பவித்ரா வீட்டுக்குச் சென்று மீண்டும் தன்னுடன் வருமாறு கூறியுள்ளார். அதற்கு பவித்ரா மறுக்கவே, அவரை அரிவாளால் வெட்டினார். அதனைத் தொடர்ந்து மாமனார் சாஸ்தா மூர்த்தி, பவித்ராவின் தாய் அமுதா, பவித்ராவின் பாட்டி சித்தம்மாள் ஆகியோரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினார்.
இதில் பவித்ரா சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து காயமடைந்த மூன்று பேரும் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க... ரவுடி ஒருவரை சரமாரியாக வெட்டி கொலை செய்யும் சிசிடிவி காட்சி வெளியீடு!