ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி வனப்பகுதியில் யானை,புலி, சிறுத்தை, மான்கள் அதிகளவில் வசித்து வருகின்றன. வனக்கிராமங்களை உள்ளடக்கிய இந்த அடர் காட்டுபகுதியில் சில நாட்களுக்கு முன் தீ வைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில், மரம், செடி கொடிகள் தீயில் கருகி நாசமாயின.
தீத்தடுப்பு நடவடிக்கையில் தாளவாடி வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குமிட்டாபுரம் வனத்தில் பதுங்கியிருந்த நபரை பிடித்து வனத்துறையினர் விசாரித்தனர். அவரிடமிருந்து சுருக்கு கம்பி, கத்தி அரிவாள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அவர் பெயர் சென்னஞ்சன் என்பதும், இவர் வனக்குட்டையில் விஷம் வைத்து விலங்குகளை வேட்டையாடியதும் தெரியவந்தது. கைதானவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனையடுத்து சென்னஞ்சன் மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சத்தியமங்கலம் கிளை சிறையில் அடைத்தனர்.