ஈரோடு: சத்தியமங்கலம் வனப்பகுதி அருகே தனியார் விவசாயத் தோட்டத்தில், நேற்று (ஜன.9) மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் யானை உடலைக் கைப்பற்றி, வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில், ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த காட்டு யானைகள், இரவு நேரத்தில் கூட்டம் கூட்டமாக வனப்பகுதியை விட்டு வெளியேறி, கிராமங்களில் புகுந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது.
இந்த நிலையில், பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பசுவபாளையம் கிராமத்தின் அருகே உள்ள தனியார் விவசாய தோட்டத்தில், சுமார் 15 வயதுடைய ஒரு ஆண் யானை மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்ட கிராம மக்கள், உடனடியாக இது குறித்து பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வனத்துறை கால்நடை மருத்துவரை வரவழைத்து, யானையின் இறப்புக்கான காரணம் குறித்து கண்டறிவதற்காக, உடற்கூறு பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். யானையின் உடற்கூறு பரிசோதனையின் அறிக்கை வந்த பிறகே, யானையின் இறப்பிற்கான விவரங்கள் தெரிய வரும்.
15 வயதுடைய ஆண் யானை தனியார் தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று (ஜன.9) தென்காசி மாவட்டம் புளியங்குடி வனப்பகுதியில் இரண்டு வயதான ஆண் குட்டியானை, உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விளா முண்டி வனப்பகுதியை விட்டு வெளியேறிய கரடி.. ஊருக்குள் நடமாடும் சிசிடிவி காட்சி!