ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மெய்யப்பன் (22). இவர், சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். மெய்யப்பனும் தனியார் கல்லூரியில் படித்துவரும் ஜீவிதாவும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வீட்டில் எதிர்ப்புகள் கிளம்பவே இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். இதனிடையே, காதல் ஜோடி இருக்கும் இடத்தை தெரிந்துகொண்ட பெண்ணின் உறவினர்கள், திருமணம் நடைபெற்ற இடத்திற்கு வந்து பெண்ணை கடுமையாகத் தாக்கி, மெய்யப்பன் கையிலிருந்த செல்போன்களைப் பறித்துவிட்டு, பெண்ணை கட்டாயப்படுத்தி காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், மெய்யப்பன், தனது மனைவி ஜீவிதா உயிருடன் தான் இருக்கின்றாரா? என்பது தனக்குத் தெரியவில்லை. தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகாரளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் பெருந் துறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: நாய்கள் கடித்த பச்சிளம் குழந்தை உடல் மீட்பு!