ஈரோடு: தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் உள்ள சத்தியமங்கலம் - திம்பம் மலைப் பாதையில் விலங்குகளைப் பாதுகாக்க இரவு நேர வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தார்.
குறிப்பாக, மலைவழிச் சாலைகளில் இரவு நேரங்களில் விலங்குகள் வாகன விபத்தில் சிக்குவதாகவும், விலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி அவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் மலைப் பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்தது. உயர் நீதிமன்றம் விதித்த தடையைத் தொடர்ந்து கனரக வாகனங்களை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இயக்க தடை விதிக்கப்பட்டன.
காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 16.2 டன் எடைக்கு குறைவாக பாரம் கொண்ட 6 சக்கர வாகனங்கள் மட்டுமே திம்பம் மலைப்பாதையில் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரமாக குறைந்தது. எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் இந்த சாலை இயற்கை சூழலுடன் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
மேலும், 10 மற்றும் 12 சக்கர லாரி உரிமையாளர்கள் பர்கூர் வழியாக கர்நாடகத்திற்கு செல்வதால் போதிய வாடகை கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சத்தியமங்கலத்தில் நடைபெற்ற திம்பம் மலைப்பாதை லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.
மேலும், இக்கூட்டத்தில் பண்ணாரி சோதனைச் சாவாடி மற்றும் காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் 16.2 டன் எடையுள்ள வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை மீறி வனத்துறையினர் லஞ்சம் பெற்றுக் கொண்டு 23 டன் வரை பாரம் ஏற்றிய 6 சக்கர லாரிகளை அனுமதிப்பதாக குற்றம் சாட்டினர்.
திம்பம் வாகனப் போக்குவரத்து தடையால் மெக்கானிக், பஞ்சர் கடை, ஆயில் ஸ்டோர் உள்ளிட்ட தொழில்கள் முடங்கி போனதாகவும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு மறு பரிசீலனை செய்து, மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி திம்பம் மலைப் பாதையில் 10 சக்கர வாகனங்கள் இயங்க அனுமதி அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:கோத்தகிரி கொலை வழக்கு: காவல் துறையின் பார்வையில் நடத்தப்பட்ட செயல்முறை விளக்கம்!