ஈரோடு மாவட்டம் மேட்டூர் சாலையில் ஈஸ்வரன் என்ற பெயரில் தங்கும் விடுதி நடத்தி வந்தவர் குணசேகரன். இவர் தனது சகோதரர்கள் ஈஸ்வரன், பழனிசாமி ஆகியோருடன் இணைந்து தங்கும் விடுதி நடத்திவந்தநிலையில், நேற்று அதிகாலை தனது விடுதியின் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு மாநகர காவல் துறையினர் இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தற்கொலைக்கு குடும்பத்தகராறு காரணமா? கடன் பிரச்னை காரணமா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், குணசேகரன் தங்கும் விடுதியின் மூன்றாவது தளத்தில் இருந்து தற்கொலை செய்துகொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில், குணசேகரன் தற்கொலை செய்வதற்கு யோசிப்பதும், அதன்பின் தற்கொலை முயற்சியை கைவிட்டு பின்வாங்குவதும், இறுதியில் குதித்து தற்கொலை செய்துகொள்ளும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.