ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதி குன்றி கிராமத்தில் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் ரோந்து செல்லும்போது பள்ளத்தில் மறைத்து வைத்திருந்த நான்கு ஒற்றைக்குழல் நாட்டுத்துப்பாக்கிகளை கண்டுபிடித்தனர்.
இதுதொடர்பாக அப்பகுதியில் விசாரணை செய்தபோது குன்றி கிராமத்தைச் சேர்ந்த சிக்கண்ணா( 40), ஜேசுராஜ்(50), சின்னப்பையன்(45), பெரியசாமி ஆகிய நான்கு பேர் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்ததும், இரவு நேரத்தில் வனப்பகுதிக்கு சென்று வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கிகளை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து கடம்பூர் காவல்துறையினர் நான்கு பேரையும் கைது செய்து கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.