ஈரோடு: வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கால்நடை சந்தை நடைபெறும். கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட நான்கு மாவட்ட எல்லையில் உள்ள இச்சந்தையில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள், விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன.
அந்தவகையில், நேற்று (அக்.21) கூடிய வாரச்சந்தையில் வழக்கம்போல் ஆடுகள் விற்பனை நடந்தன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
புரட்டாசி மாதம் ஆடு விற்பனை மந்தமாக இருந்த நிலையில், தற்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஆடுகளை வாங்க அதிகாலை முதலே குவிய தொடங்கினர்.
எகிரும் விலை
நேற்று (அக்.21) கூடிய இச்சந்தைக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் 400க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வந்தன. அதேசமயம் விற்பனைக்கு வந்த ஆடுகளின் விலை 200 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை உயர்ந்தது.
குறிப்பாக கடந்த வாரம் 5,500 ரூபாய் வரை விற்பனையான 10 கிலோ வெள்ளாட்டு கிடாய், நேற்று அதே எடை கொண்ட வெள்ளாடு 6,000 ரூபாய் வரை விற்பனையானது.
புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி தொடங்கியுள்ளதால் சென்றவாரத்தைவிட இந்த வாரம் அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், இரண்டு வாரங்களில் தீபாவளி பண்டிகையும் வருவதால் இந்த வாரம் வெள்ளாடு மற்றும் ஆட்டுக்கிடா 400 ரூபாய் வரை விலை உயர்ந்து சந்தைக்கு கொண்டுவரப்பட்ட அனைத்து ஆடுகளும் 50 லட்ச ரூபாய்க்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஜவுளிக் கடைக்கு சீல் வைக்க சென்ற அலுவலர்கள் - வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்