கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதையடுத்து, ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்கள் வீட்டினுள்ளேயிருக்க அறிவுறுத்தப்பட்டார்கள். இதனால், விளிம்புநிலை மக்கள் வேலையிழந்து, அத்தியாவசிய தேவைகளுக்கே எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
அப்படியொரு சூழலில், தவித்துக் கொண்டிருப்பவர்கள்தான் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே குமாரபாளையத்தைச் சேர்ந்த காலணி பழுதுநீக்கும் தொழிலாளிகள். கிழிந்த காலணிகளைத் தைப்பதால் கிடைத்த வருமானம்தான், அவர்களின் வாழ்வாதாரமாக இருந்துள்ளது.
இந்நிலையில், நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு அவர்களின் தேவைகளை அதிகரித்துள்ளன. மக்கள் வெளியே நடமாடினால்தான், இவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்ற நிலையில், எப்போது நிலைமை சரியாகும் எனக் காத்துக்கிடக்கிறார்கள். அரசு செய்துகொடுத்த உதவிகள் போதுமானதாகயில்லை என்கின்றனர்.
இது குறித்து காலணி தைப்பவர்கள் பேசுகையில், ”காலணி தைக்கும் தொழிலை நம்பி 200 குடும்பங்கள் வசித்துவருகிறோம். பழுதான காலணிகளைச் சீர்செய்வது, பைகளைத் தைப்பது போன்றவற்றை நம்பித்தான் எங்கள் வாழ்க்கையிருக்கிறது. பழைய காலணிகளில்தான் எங்களுக்கு கூலி கிடைக்கிறது. நாங்கள் தயாரிக்கும் புதிய காலணிகளுக்கு வரவேற்பில்லை. இந்நிலையில், கரோனாவால் அறிவித்த ஊடரங்கு எங்களின் வாழ்வாதாரத்தை அசைத்துப் பார்த்துவிட்டது.
ஊருக்குள் குடியிருக்கும் எங்களைத் தேடிவந்து காலணி தைத்துச் செல்ல வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. கிடைக்கும் சொற்ப கூலி, உணவுக்கே சரியாகயிருந்தது. சேமிப்பென எதுவும் இல்லை. அது வயிறுக்குத் தெரியுமா? பசிக்கத்தான் செய்கிறது.
நாங்கள் வசிக்கும் வீடுகளும் அவ்வளவு வசதிகளோடு இல்லை. வேறெங்கும் செல்ல முடியாமல், வேப்பமர நிழலே கதியெனக் கிடக்கிறோம். அரசு எங்களைப் போன்றவர்களை ஏறெடுத்து பார்த்து உதவ வேண்டும்” எனக் கோரிக்கைவைக்கின்றனர்.
இதையும் படிங்க: கோவிட்-19: தெலங்கானாவில் மே-7ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு