ஈரோடு அசோகபுரம் பவானி மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராம பாண்டி. இவர் ஈரோடு பார்க் ரோட்டில் உள்ள கிருஷ்ணா ரிபைனரீஸ் ஆயில் நிறுவனத்தில் ஆய்வக நிபுணராக பணிபுரிந்துவருகிறார். இந்த நிறுவனத்தில் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தயாரிக்கப்படுகிறது. இதில் எண்ணெய் தயாரிப்பதற்காக அரசின் அனுமதி பெற்று எரிசாராயம் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், சாராயம் தயாரிக்க பயன்படும் எரிசாராயத்தை ராமபாண்டி விற்பனை செய்து வருவதாக ஈரோடு மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், ஈரோடு மதுவிலக்கு காவல்துறையினர் சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் திடீர் ஆய்வு நடத்தினர். இதில், அந்நிறுவனத்தில் எரிசாராயத்தை திருடி விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து ராமபாண்டி, அவருக்கு உடந்தையாக இருந்த ஈரோடு அசோகபுரம் கரிகாலன் வீதியை சேர்ந்த மணிகண்டன், மொடக்குறிச்சி நஞ்சை ஊத்துக்குளி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பாரதி, நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் நாட்டார் மங்கலத்தை சேர்ந்த சக்திவேல் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் ஒரு லிட்டர் எரிசாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் பார்க்க: ஊதியம் கொடுத்த சான்றிதழ்களை தனியார் கல்லூரி சமர்ப்பிக்க முதலமைச்சருக்கு மனு