ஈரோடு மாவட்டம், தாளவாடி புலிகள் காப்பகம் அமைந்துள்ள மலைப்பகுதியில் மக்கள் ஆடு, எருமை, பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இரு மாநில எல்லையில் அமைந்துள்ள இப்பகுதியில் காட்டில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று கடந்த ஒரு வருடமாக ஊருக்குள் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வந்தது.
சூசைபுரம், மல்கொத்திபுரம், மகாராஜபுரம், தொட்டகாஜனூர், சூசைபுரம் என குறிப்பிட்ட பகுதிகளில் கால்நடைகளை வேட்டையாடிவிட்டு அருகில் உள்ள காட்டில் பதுங்கி வாழ்ந்து வந்தது. இதையடுத்து சிறுத்தையைப் பிடிக்க பல்வேறு இடங்களில் கூண்டு வைத்து வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
ஆனால் ஆறு மாதங்களாக கூண்டில் சிக்காமல் சிறுத்தை தப்பி வந்தது. இந்நிலையில் நேற்று (ஜுன் 29) திகினாரை மாதேவன் என்பவரது வீட்டில் கட்டியிருந்த ஆட்டை சிறுத்தை கடித்துக் கொன்றது.
இதனையடுத்து சிறுத்தை கடித்துக் கொன்ற ஆட்டின் பாதி உடலை கூண்டில் வைத்து அப்பகுதி மக்கள் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று தொட்டகாஜனூர் கல்குவாரியில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியது.
கூண்டில் சிக்கிய சிறுத்தை அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தபோது காயமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது, அதில் சிறுத்தை நல்ல உடல்நலத்துடன் இருப்பது தெரிய வந்தது.
![சிறுத்தை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05:50:26:1593519626_tn-erd-04-sathy-leopard-release-vis-tn10009_30062020142502_3006f_1593507302_126.jpg)
தொடர்ந்து சிறுத்தையை கூண்டோடு லாரியில் ஏற்றிய வனத் துறையினர், கேர்மாளம் வனப்பகுதியில் விடுவித்தனர்.
இதையும் படிங்க : ஈரோட்டில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் பரிசோதனை முகாம் - ஆட்சியர் உத்தரவு