ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள புதுக்குய்யனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அருணாச்சலம். இவர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தனது தோட்டத்தில் நான்கு வெள்ளாடுகள், இரண்டு மாடுகள் வைத்து பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், ஆடுகள் மிரட்சியுடன் சப்தம் போடுவதைக்கண்டு விவசாயி வெளியே வந்து பார்த்தபோது வெள்ளாடு கழுத்தில் ரத்தக்காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது, சிறுத்தை கடித்து வெள்ளாட்டின் கழுத்தில் காயம் ஏற்பட்டது தெரிய வந்தது.
அதேபோல் அருணாச்சலம் தோட்டத்தின் அருகே உள்ள விவசாயி சண்முகம் என்பவரது வெள்ளாட்டையும் சிறுத்தை கடித்து வனப்பகுதிக்குள் தூக்கிச் சென்றதுள்ளது. இதுகுறித்து, உடனடியாக அப்பகுதி விவசாயிகள் பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சிறுத்தை விவசாய தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக் கொல்வதால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறி கால்நடைகளை அடித்துக் கொல்லும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க :ரயில்வே குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: பணியாளா்கள் பீதி