எல்லோரும் நம்முடன் என்ற முழக்கத்துடன் திமுகவின் தலைமைக்கழகம் இணைய வழியில் உறுப்பினர்கள் சேரும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டம் தொடங்கியது முதல் இன்றுவரை இணைய வழியில் 1 லட்சத்து 30 ஆயிரம் உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் இணைய வழியில் உறுப்பினர்களை சேர்க்கும் முகாம் கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இம்முகாமை வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தொடக்கி வைத்த பின் புதிதாக இணைந்த இளைஞர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
சுமார் நூற்றுக்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் இணைய வழியில் உறுப்பினராக தங்களை இணைத்துக்கொள்ள ஆர்வத்துடன் முகாமிற்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.