கீழடி, ஆதிச்சநல்லூர் போன்றப் பகுதிகளைப்போல், ஈரோடு மாவட்டம் கொடுமணலில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில், பழங்காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான முக்கிய ஆதாரங்கள், வண்ணமயமான தொழில் புரிந்ததற்கான சான்றுகள், முதுமக்கள் தாழி எனப்பல்வேறு அரிய பொருட்கள், தமிழ்நாடு தொல்லியல் துறையினருக்குக் கிடைத்து வருகிறது.
தமிழ்நாட்டில் மிகவும் தொன்மையும், பாரம்பரியமும் கொண்ட முன்னோர் வாழ்வாதாரங்களாக புதைந்துக் கிடக்கும் கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் போன்ற இடங்கள் கருதப்படுகின்றன. இங்கு தமிழ்நாடு தொல்லியல் துறையினர் மேற்கொண்ட அகழாய்வுப் பணியைப் போலவே, மாநிலம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகழாய்வுப் பணியைத் தொடங்கவுள்ளதாக, தமிழ்நாடு தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய வெளிநாடுகளுடனும், இஸ்லாமிய நகைத் தயாரிப்பாளர்கள் மற்றும் வண்ண வண்ண கற்கள் தயாரிக்கும் வியாபாரிகளுடனும் தமிழ்நாட்டில் வணிகத் தொடர்பு இருப்பது குறித்து முதன் முதலாக வெளி உலகுக்கு பறை சாற்றிய ஈரோடு மாவட்டம், கொடுமணலிலும் கடந்த 1ஆம் தேதி முதல் அகழாய்வுப் பணியினை தமிழ்நாடு தொல்லியல் துறையினர் தொடங்கினர்.
கடந்த பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொடுமணல் அகழாய்வுப் பணியை, தமிழ்நாட்டில் தொல்லியல் துறையின் தலைமை அலுவலர் ரஞ்சித் தலைமையிலான அலுவலர்கள் 5 குழுக்களாகப் பிரிந்து, ஏற்கெனவே அளவீடு செய்யப்பட்டு பிரிக்கப்பட்டிருந்த பகுதிகளில், அகழாய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த அகழாய்வுப் பணியில் இரும்புகள், பளிங்கு கற்கள், கல்மணி சங்குகள், மண்ணில் செய்யப்பட்ட மணிகள், வளையல் கண்ணாடிகள் உள்ளிட்ட அரிய வகைப் பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அதேபோல் எலும்புகள், சரளை மண் ஓடுகள், மக்கள் வாழ்ந்த வீடுகளுக்கான தரைத்தளம், சுடுமண்ணால் ஆன நெசவுத் தொழில் பயன்பாட்டுப் பொருட்கள் உள்ளிட்டவைகளையும் தொல்லியல் துறையினர் சேகரித்துள்ளனர்.
இதனிடையே, அந்தக் காலங்களில் தங்களது மூத்தோரை புதைத்துப் பாதுகாக்க உதவிய முதுமக்கள் தாழியுடைய எச்சங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.
தொடர்ந்து நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில், பல்வேறு ஆச்சரியங்கள் அடங்கிய அதிசயப் பொருட்கள் கிடைக்கப்பெற வாய்ப்பிருப்பதாகவும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து தங்களுக்குத் தேவையான துணிகளையும், வண்ண வண்ண கற்களையும் பெற்றுள்ளதற்கான சாட்சியங்கள் கிடைக்கப்பெறவும் வாய்ப்பிருப்பதாகவும் அகழாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பெரிய அளவிலான எலும்புக்கூடு