ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அணையலிருந்து தண்ணீர் எடுத்தால் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் தொழில்நுட்ப வல்லுநர் குழு அமைத்து, கொடிவேரி பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் குறித்து ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியருக்கு அளித்தது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தற்போது கொடிவேரி அணையின் உட்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இடம் தான் சிறந்தது என்று தொழில்நுட்ப வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளதாகவும், எனவே விவசாயிகளும், மீனவர்களும் இத்திட்டத்தினை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் வேண்டுகோள்விடுத்தார்.
அதற்கு விவசாயிகளும், மீனவர்களும் வானி ஆற்றுப்படுகையில் கொடிவேரி அணைக்கு கீழ் புறத்திலும் மேற்புறத்திலும் பல்வேறு இடங்கள் உள்ளபோது கொடிவேரி அணையின் உட்பகுதியில் செயல்படுத்த முற்படுவது எதனால் என்று கேள்வி எழுப்பினர். மேலும், இத்திட்டத்தினை செயல்படுத்தினால் தடப்பள்ளி வாய்க்கால் பாசம் வெகுவாக பாதிக்கப்படுவதுடன் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி ஆகிய மூன்று தாலுக்காக்களும் பாலைவனம் ஆகும் எனத் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
கொடிவேரி பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டத்தினை நிறைவேற்ற விவசாயிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, இது குறித்து பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.