ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள கொடுமணலில் கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு தொல்லியல் கழகத்தின் சார்பில் இடையில் சில ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
அந்நிய நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு வணிகத்தொடர்பு இருந்து வந்ததை உலகிற்கு அடையாளப்படுத்திய கொடுமணலில் மீண்டும் சுமார் இருபது ஆய்வாளர்களுடன் தீவிரமாக நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் வெறெங்கும் கிடைக்காத கல்லறை அமைப்பை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
மேலும் வண்ண வண்ண கற்கள், இரும்பினை உருக்கும் ஆலை, இரும்பு பாசி மணிகள், விலங்குகள் மற்றும் மனிதர்களின் எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெற்றன. இங்கு கண்டறியப்பட்ட கல்லறை வடிவம் இதுவரை கிடைக்கப்பெறாததாகவும் இறந்துபோனவர்களுக்கு விருப்பமான பொருட்களை வைத்து புதைக்கும் பழக்கமும் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக அகழ்வாராய்ச்சி பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஆய்வுப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாராய்ச்சி பணிகளை விரைந்து நடத்தி இன்னும் இரண்டு மாதங்களுக்குள் முடித்து வைக்கப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கு சேகரிக்கப்படும் அனைத்து வகைப் பொருட்களையும் கொண்ட கொடுமணல் அருங்காட்சியகத்தை அமைத்திட மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் தமிழ்நாடு தொல்லியல் கழக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.