தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் , நீர்த்தேக்கம் 105 உயரமும் 32.8 டிஎம்சி நீர் தேக்கும் கொள்ளளவு கொண்டதாகும்.
பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்குத் திறக்கப்பட்ட மூன்றாம் சுற்று தண்ணீர் நிறுத்தப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும், பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்கிறது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மாவட்டம், வடகேரளாவில் கடந்தாண்டு பெய்த பலத்த மழை காரணமாக கடந்தாண்டு அக்டோபர் 20ஆம் தேதி, அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதோடு, நவம்பர் மாதத்தில் முழுகொள்ளளவான 105 அடியை தொட்டது.
மேலும், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சீராக இருந்ததால், பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டும். தொடர்ந்து, அணையின் நீர்மட்டம் சரியாமல், பராமரிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் கீழ்பவானி வாய்க்கால் இரண்டாம் போக பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது.
நீர் திறப்பு மொத்தம் ஆறு சுற்றுகள் என்ற சுழற்சி முறையில் மூன்று சுற்றுக்கு பிப்ரவரி 28ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு 13 நாள்களுக்கு பிறகு வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது. இதனால், தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு 800 கனஅடி நீரும் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 93 அடியாகவும், நீர் இருப்பு 23.70 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 313 கனஅடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து பாசனம், குடிநீர் தேவைக்காக பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் 800 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதையும் படிங்க: செண்டு மல்லிப் பூக்கள் விலை வீழ்ச்சி - விவசாயிகள் வேதனை