ஈரோடு: சத்தியமங்கலம், வடக்குப்பேட்டையில் உள்ள ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கோயிலில் 3 நாட்களாக நடைபெற்ற மகா சிவராத்தி விழா நேற்றுடன் (பிப்.19) நிறைவு பெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, இரவு பவானி ஆற்றில் இருந்து காவடி எடுத்துக் கொண்டு மெய்ச் சிலிர்க்கும் வகையில் பக்தர்கள பாரம்பரிய காவடியாட்டம் ஆடினார்.
சத்தியமங்கலம் ராம ஆஞ்சநேயர் கோயிலில் கணபதி பூஜையுடன் மகா சிவராத்திரி விழா கடந்த சனிக்கிழமை துவங்கியது. இதில் ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு கொடியேற்றுதல் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் காவடி எடுத்து பவானி ஆற்றுக்கு சென்று ஆற்றில் புனித நீராடி காவடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். பின்னர், பவானி ஆற்றில் இருந்து தாரை தப்பட்டைகள் முழங்க பக்தர்கள் காவடி எடுத்து காவடியாட்டம் ஆடியபடி ஊர்வலமாக சென்றனர்.
இதில், சிறுவர் முதல் பெரியோர் வரை மத்தாள இசைக்கேற்ப காவடி எடுத்து ஆடிச் சென்றது அனைவரையும் மெய்ச்சிலிர்க்க வைத்தது. இந்த காவடியாட்டத்தை வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர். காவடி சென்ற பக்தர்களுக்கு வழிநெடுகிலும் இருந்த பெண்கள் புனிதநீர் ஊற்றி குளிர்ச்சி ஏற்படுத்தினர்.
சிவன் அவதாரங்களில் ஒன்றான தன்னாசி மண் உருவசிலையை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். இரவு நடந்த மகா அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு