கரோனா ஊரடங்கால் ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்த அனைத்துக் கோயில்களும் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து திறக்கவும், கட்டுப்பாடுகளுடன் வழிபாடு மேற்கொள்ளவும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. இதனைத்தொடர்ந்து ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோயில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்றன.
புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகள் நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்ததுடன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றுவந்தது.
புரட்டாசி மாத வைபவத்தை முன்னிட்டு ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் ஆலயத்தில் திருத்தேரோட்ட விழா நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோயிலில் சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டு தேரில் படியமர்த்தப்பட்ட கமலவல்லி தாயார் சமேத கஸ்தூரி அரங்கநாதருக்கு பஞ்சமுக விளக்குகள் கொண்டு மகாதீபாராதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மங்கள வாத்ய இசை முழக்கத்துடன் பக்தர்கள் தேரின் வடத்தை பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். கோவில் முன்பு தொடங்கிய தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோயில் முன்பாக நிலை நிறுத்தப்பட்டது. தேரோட்டத்தின்போது வழிதோறும் காத்திருந்த பக்தர்கள் சாமிக்கு பூஜைப் பொருள்களை படையலிட்டு பூஜை செய்து வணங்கி மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: பெரியார் சிலையில் காவி நிறம்; அரசியல் தலைவர்கள் கண்டனம்!