ஈரோடு மாவட்டம் கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் தேர்த் திருவிழா புரட்டாசி மாதம் தொடங்கியது. தினமும் காலை ஆறு மணிக்கு கோ பூஜை, திருமஞ்சனம், மகா தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.
தினமும் இரவு சாமி புறப்பட்டு கருட வாகனம், குதிரை, யானை, அன்னபட்சி வாகனம், ஹனுமன், சிம்ம வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வருகின்றது. இதனைத் தொடர்ந்து நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் இழுத்தல், இன்று காலை எட்டு மணியளவில் தொடங்கியது. அரங்கநாதருக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் தேரானது ஈஸ்வரன் கோயில், மணிக்கூண்டு, பார்க் உள்ளிட்ட பாதைகளின் வழியாக மாரியம்மன் கோயிலுக்கு வந்தடைந்தது. பின்னர், மாலை நான்கு மணிக்கு காமராஜர் வீதி வழியாக கோயில் வளாகத்தை வந்தடையும் எனக் கூறப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வந்து கலந்துகொண்ட பக்தர்கள் கோலாட்டம் ஆடியும், செண்டை மேளம் முழங்க அரோகரா கோஷத்துடனும் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
இதையும் படிங்க : ஆஞ்சநேயர் கோயிலில் ஆயுதபூஜை கொண்டாட்டம்!