ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு, பெங்களூரு, சாம்ராஜ்நகர், கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளுக்குத் தமிழ்நாட்டிலிருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூர், சாம்ராஜ் நகர், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு கர்நாடக மாநில அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதால், இன்றும்(ஏப்.24), நாளையும்(ஏப்.25) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பேருந்துகள் நேற்று(ஏப்.23) இயக்கப்பட்டாது என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டது.
இன்று காலை இரு மாநிலத்துக்கு இடையே அரசு, தனியார் பேருந்துகளில் பயணிகள் பயணிக்க கர்நாடக அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி, இன்று (ஏப். 24) காலை தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் மைசூருக்கு இயக்கப்பட்டன. தகுந்த இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு முகக்கவத்துடன் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர், கொள்ளேகால் ஆகிய பகுதிகளுக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. அத்தியாவசிய பொருள்களான காய்கறிகள், பால், மருந்து பொருள்கள், உணவுப் பொருள்கள் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என, இரு மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் பணியில் உள்ள அலுவலர்கள் தெரிவித்தனர்.