கோபியில் நடைபெற்ற ஈரோடு மாவட்ட பாஜக மேற்கு மாவட்ட கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என ஆரம்பம் முதலே பாஜக வலியுறுத்திவருகிறது. தவறுசெய்த காவல் துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று அப்போதே கூறியிருந்தேன்.
இவ்விவகாரத்தில் திமுக எம்பி கனிமொழி அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார். கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திமுக எம்எல்ஏவுக்கும், எல்லையில் மரணமடைந்த ராணுவ வீரர் பழனிக்கும் அஞ்சலி செலுத்த வராத கனிமொழி, சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் அரசையும் குற்றஞ்சாட்டிவருகிறார்.
வழக்கை சிபிஐக்கு மாற்றி அரசும் தன்னால் இயன்ற அத்துனை முயற்சிகளையும் எடுத்துவருகிறது. ஆகவே இவ்விவகாரத்தில் கனிமொழி அரசியல் செய்யக் கூடாது. கரோனா காலத்தில் காவல் துறையினர் தங்களது உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிவருகின்றனர்.
ஒரு சிலர் செய்த தவறினால் ஒட்டுமொத்த காவல் துறையையும் கலங்கப்படுத்தக் கூடாது. அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கொண்டுவர வேண்டும். ரஜினி மிகப் பெரிய ஆன்மிக பக்தி கொண்டவர். தேசியச் சிந்தனை கொண்டவர். அவர் கட்சி ஆரம்பித்தால் வரவேற்பேன்” என்றார்.
இதையும் படிங்க:'வியாபாரிகள் மரணங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை திமுக போராடும்' - கனிமொழி எம்.பி