ஈரோடு மாவட்டம் தாளவாடி காவல் நிலைய சரகம், சிமிட்ட ஹள்ளியில் அமைந்துள்ளது பைனாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி. இங்கு தமிழ்நாடு அரசால் கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யும் பணி நடந்துவருகிறது.
இதையடுத்து பொதுமக்களுக்கு அலுவலக நேரம் முடிந்த பிறகும் இரவு நேரம் வரை வங்கியின் செயலாளர், பணியாளர்கள் பணிபுரிந்து தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் நகைக்கடன் கொடுப்பதாகப் புகார் எழுந்தது.
இந்தப் புகாரையடுத்து அக்கிராம மக்கள் வங்கி வளாகத்துக்குச் சென்று செயலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து வங்கி கூட்டுறவுச் சங்கத் தலைவர் ராமண்ணா, தாளவாடி காவல் ஆய்வாளர் அன்புரசு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
வேலை நேரம் முடிந்த பின்பு கொடுக்கப்பட்ட நகைக் கடன்களை ரத்துசெய்து விடுவதாகவும், செயலாளர், பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைவர் ராமண்ணா உறுதியளித்தார்.
இதையடுத்து பொதுமக்கள் வங்கியிலிருந்து கலைந்துசென்றனர். அப்போது, அரசு அறிவித்த கூட்டுறவுக் கடன் தள்ளுபடியை வங்கி செயலாளர்கள் தனது உறவினர்களுக்கு முன்னர் தேதியில் நகை வைத்து கடன் பெற்றதாக பொய்க் கணக்குக் காட்டி அதனை தற்போது தள்ளுபடி செய்வதாகவும் குற்றஞ்சாட்டினர்.