கரோனா நோய்ப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மாவட்டக் காவல்துறையின் சார்பில் பல்வேறுத் தரப்பு பொதுமக்களிடமிருந்தும் அவர்கள் வசிப்பிடத்திற்கே சென்று மனுக்கள் பெற்றுக் கொள்ளப்படுவதும், ஏற்கெனவே பெற்றுக் கொள்ளப்பட்ட மனுக்கள் மீதான இருதரப்பு நேரிடை விசாரணையும் நடைபெற்றது.
முகாமின் போது பல்வேறு தரப்பட்டவர்களிடமிருந்து அனைத்துத் தரப்பு புகார் மனுக்களும், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களும் பெற்றுக் கொள்ளப்பட்டன. மேலும் முதியோர்கள் , பெண்கள் பாதுகாப்பு, கணவன் மனைவியிடையே தொடர் பிரச்னை, பகுதியில் நபர்கள் ஏற்படுத்தும் பிரச்னைகள் குறித்து ஏற்கெனவே பெறப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த நிலையில் ஈரோடு நகர உட்கோட்ட காவல் துறையின் சார்பில் பொதுமக்களின் குறை தீர்க்கும் மனு விசாரணை முகாம் ஈரோட்டிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அதற்காக மனுதாரர்கள், புகார்தாரர்கள் ஆகியோரை நேரிடையாக வரவழைத்து இருவரையும் தனித்தனியாகவோ, இரு தரப்பினரையும் அருகாமைப் பகுதியில் அமர வைத்தோ சமாதானம் செய்து வைத்திடவும், பிரச்னைகளில் தீர்வு காணவும் முயற்சித்தனர்.
முயற்சி பலனளிக்காத வகையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
கரோனா நோய்ப்பரவலைத் தடுக்கும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனுக்கள் மீதான விசாரணை முகாம் அனைத்துத் தரப்பினரிடையேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், இந்த நேரிடை விசாரணை முகாம்களை மாவட்டம் முழுவதும் நடத்திட முடிவு செய்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.