சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் 374 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவிற்குத் தேவையான கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், விவிபேட் இயந்திரம் உள்ளிட்ட முக்கியமான இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டுள்ளன.
ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நாள் என்பதால் இன்னும் குறுகிய காலம் மட்டுமே உள்ளதால் வாக்குச்சாவடிக்குத் தேவையான பொருள்களைப் பிரித்து அடுக்கும் பணி சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் உமா சங்கர் தலைமையில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குப்பதிவிற்குத் தேவையான வாக்காளர் பதிவு படிவம், பேலட் பேப்பர், அழியாத மை, ரப்பர் ஸ்டாம்ப், தீப்பெட்டி, டைரி, மெட்டல் ஸ்கேல், பென்சில், பேனா உள்ளிட்ட எழுது பொருள்கள், பசை உள்ளிட்ட 36 வகையான பொருள்கள் தரம்பிரிக்கப்பட்டு சரியாக உள்ளனவா எனப் பரிசோதிக்கப்பட்டு பின்னர் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக அடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
தேர்தல் நெருங்குவதால் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்குப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வேலைகள் உள்ளதால் முன்னதாக இந்தப் பணிகள் தொடங்கி உள்ளதாகவும், ஏப்ரல் 5ஆம் தேதி காலை முதல் வாக்குச்சாவடிக்குத் தேவையான பொருள்கள் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கும் பணி தொடங்கும் என பவானிசாகர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் உமா சங்கர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'திமுக குறித்து பேசக்கூடாது!' - நாம் தமிழர் கட்சியினர் மீது திமுக தாக்குதல்