ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து ஏப்ரல் மாதம் தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்கால்களிலிருந்து முதல் போக பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டதால் கோபி, அந்தியூர் மற்றும் பவானி பாசனப்பகுதியில் 24 ஆயிரம் ஏக்கரில் முதல் போக நெல் சாகுபடி தொடங்கியது.
3 மாத பயிரான ஏ.எஸ்.டி., 16 (இட்லி குண்டு), ஏ.டி.டி. சன்ன ரகம் 45, சம்பா, பொன்னி உள்ளிட்ட ரகங்கள் தற்போது அறுவடைக்குத் தயாராகியுள்ளன. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளான பங்களாபுதூர், என்.பாளையம், பாரியூர், வெள்ளாளபாளையம் உள்ளிட்டப் பகுதிகளில் கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகள் தங்கள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்வதற்காக, கோபிசெட்டிபாளையம், கூகலூர், நஞ்சகவுண்டன்பாளையம், புதுவள்ளியாம்பாளையம், புதுக்கரைபுதூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் தங்கள் நிலங்களில் அறுவடை செய்யும் நெல் மணிகளை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 20.40க்கும் அதிகபட்சமாக ரூ.20.60க்கும் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து வருகின்றனர். மேலும் உரம், பூச்சி மருந்து, ஆட்கூலி ஆகிவற்றின் விலை உயர்ந்து உள்ளதால் உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்து வருகிறது.
கட்டுப்படியாகாத விலை நிர்ணயித்துள்ளதால் உற்பத்தி செலவைக் குறைக்க, உரங்களின் விலையை குறைத்து மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லிற்கு கூடுதல் விலை கொடுக்கவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் இறைச்சி விற்பனை மந்தம்!