ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை, கீழ்பவானி வாய்க்கால் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் முதல் போக நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது 3 மாதத்துக்கு பின் நெல் அறுவடைக்கு தயாராகிவுள்ளது.
இதையடுத்து பெரியூர், செண்பகபுதூர், உக்கரம், காவிலிபாளையம், பவானிசாகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் அறுவடை துவங்கியுள்ளது. நெல் அறுவடை இயந்திரம் மூலம் நெல் அறுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு ரூ.2000 என கணக்கிட்டு நெல் அறுவடை இயந்திரத்துக்கு வாடகை வசூல் செய்யப்படுகிறது.
மழை பெய்ததால் தண்ணீர் நிறைந்த நெல் வயல்களில் பெல்ட் நெல் அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்படுவதால் ஒரு மணி நேரத்துக்கு கூடுதலாக ஆயிரம் ரூபாய் வாடகை வசூலிக்கப்படுகிறது. தற்போது ஒரே நேரத்தில் சத்தியமங்கலம் பகுதியில் மட்டுமே 20 ஆயிரம் ஏக்கர் அறுவடை செய்ய வேண்டியது உள்ளதால் அறுவடை இயந்திரங்களின தேவை ஏற்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் செய்ய வியாபாரிகள் வந்து குறைந்த விலைக்கு கேட்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். நெல் நடவு கூலி, மருந்து, தொடர் கண்காணிப்பு என ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35,000 செலவான நிலையில் 6 பொதி மகசூல் கிடைத்துள்ளதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் மனித உழைப்பின் மூலம் நெல் அறுவடை செய்தால் நெல்லறுத்து போடப்பட்ட புல் வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டி வந்த நிலையில் எந்திரம் மூலம் அறுக்கப்படும் புல்லுக்கு சரியான விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அரசு கொள்முதல் நிலையம் திறந்து அதிக விலைக்கு வாங்கி விவசாயிகள் நஷ்டத்தை போக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மசினகுடியில் இறந்த யானைக்கு பொதுமக்கள் அஞ்சலி