ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே கொங்கர்பாளையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரம் நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.செங்கோட்டையன், மரங்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களின் காய்ச்சலை கண்டறிய அதற்கான கருவிகள் தயாராக உள்ளன. கரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்கு மாணவர்களுக்கு இரண்டு முகக்கவசங்கள் வழங்கப்படவுள்ளன. வகுப்பறைகளில் மாணவர்கள் வருகைக்கு முன்பும், பின்பும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்படும்.
கரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டால் மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாணவரையும் கண்காணிக்க வேண்டியுள்ளதால், கேரளாவில் பின்பற்றிய நடைமுறைப்படி தேர்வுக்கு முன்னதாக காலை 9.45 மணிக்கு வர வேண்டும். மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யும் தெர்மல் ஸ்கேன் கருவியை அரசு கொள்முதல் செய்துள்ளது.
காய்ச்சல் அதிகமுள்ள மாணவர்களுக்கு தேர்விலிருந்து விலக்களிப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்" என அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜக பிரமுகர் காலணியால் தாக்கப்படும் காட்சி