ஈரோடு: சத்தியமங்கலம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழி, ஆங்கில வழி என இரு வழிகளிலும் பயிற்றுவிக்கப்படும் நிலையில், தற்போது மாணவர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சேர்க்கைப் பணிகள்
இங்கு சேர்க்கைக்காக பெற்றோருடன் பள்ளிகளுக்கு வரும் மாணவியருக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றை மாணவிகள் பூர்த்தி செய்து ஆசிரியர்களிடம் வழங்குகின்றனர்.
தொடர்ந்து 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கு வரும் மாணவிகளிடம் எந்தப் பிரிவு வேண்டும் என ஆசிரியர்கள் கேட்டு அதற்கு தகுந்தாற்போல் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரிவை ஒதுக்கீடு செய்கின்றனர். சேர்க்கை முடிந்தவுடன் மாணவிகளுக்கு உடனடியாக புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
500ஐ கடந்த சேர்க்கை எண்ணிக்கை
தற்போது 11ஆம் வகுப்பில் மட்டும் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் சேர்க்கை, எல்.கே.ஜி முதல் 8ஆம் வகுப்பு வரை 200 மாணவிகள் சேர்க்கை என மொத்தம் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வமுடன் இந்தப் பள்ளியில் சேர்ந்துள்ளதால் பள்ளி ஆசிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தக் கரோனா சூழலில் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர் அரசு பள்ளியை நாடியுள்ளனர்.
’அரசு பள்ளியில் பயில்வது மகிழ்ச்சி’
சேர்க்கைக்காக வந்த மாணவிகள் தற்போது கரோனா காலம் என்பதால் ஆன்லைன் மூலம் மட்டுமே படிக்க இயலும் என்ற சூழ்நிலையில், கூடிய விரைவில் பள்ளி திறக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்தனர்.
மேலும், விரைவில் பள்ளிக்குச் சென்று பாடங்களை கற்க ஆர்வமாக உள்ளதாகவும், அரசு பள்ளியில் சேர்வதன் மூலம் லேப்டாப், காலணி, புத்தகப்பை, சைக்கிள் உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அம்மா உணவகத்தில் சத்துணவு வழங்கும் திட்டம்: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு