ஈரோடு அடுத்துள்ள லக்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம். இவருக்குச் சொந்தமான ராம் விலாஸ் உணவகம், தங்கும் விடுதி, நான்கு சக்கர வாகனங்களுக்குத் தேவையான பேட்டரி, யூபிஎஸ் பேட்டரிகள் ஆகியவற்றின் மொத்த விற்பனை நிலையங்கள், பெருந்துறை சாலையில் செயல்பட்டு வருகின்றது. அதேபோல், ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு அருகே சக்தி முருகன் ஏஜென்சி என்ற பெயரில் அனைத்து வகை பேட்டரிகளும் மொத்த விற்பனை நிலையங்களும், குடோன்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனத்தின் மீது சரக்கு சேவை வரித்தாக்கல் செய்ததில் மோசடி செய்ததாக எழுந்தப் புகாரைத் தொடர்ந்து இன்று காலையில் நிறுவனத்துக்குச் சொந்தமான ஈரோடு, லக்காபுரம், சூரம்பட்டி உள்ளிட்ட 4 இடங்களுக்கு அதிரடியாக ஒரே நேரத்தில் உள்ளே சென்ற வருமான வரித்துறையினர் 6 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டைச் சேர்ந்த வருமான வரித்துறை அலுவலர்கள் 20 பேர் 4 குழுக்களாகப் பிரிந்து, இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது. இந்த சோதனைப் பற்றி எந்த கருத்தையும் வருமான வரித்துறை அலுவலர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. சோதனை முடிந்த பிறகே உண்மை நிலவரம் தெரியவரும்.
ஈரோட்டில் நாள் தோறும் ஜவுளி நிறுவனங்கள், இயந்திர நிறுவனங்கள் எனப் பல்வேறு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருவது வணிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : 'குடியுரிமை திருத்தச் சட்டத்தை தெரிந்துகொண்டு போராட வேண்டும்'