இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் சி.என். ராஜா ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “மருத்துவர்கள் என்றும் பாரபட்சம் பார்க்காமல் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். கரோனா பாதிப்பால் 42 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் தவறானது. அப்படி ஒரு செய்தியை நாங்கள் வெளியிடவில்லை.
தமிழ்நாடு அரசு கரோனா சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர்கள் நலன்களில் அக்கறை கொண்டு தான் உள்ளது. இந்திய மருத்துவ சங்கம் என்பது எந்த ஒரு அரசியல் சாயம் இன்றி செயல்பட்டுவருகின்றது. தமிழ்நாடு முழுவதும் 37 ஆயிரம் மருத்துவர்கள் உள்ளனர். சென்னையில் மட்டும் தான் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
மற்ற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு என்பது குறைந்துவருகிறது. அதனால் விரைவில் குறைய வாய்ப்பு உள்ளது. இருந்தபோதிலும், மக்கள் இன்னும் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். "ஆண்டி வைரல் ட்ரக்"கை(எதிர்ப்பு மருந்து) தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். சிலர் அதனை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
அதனை தடுப்பதோடு, மாநில அரசு இவற்றை இலவசமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். எந்த ஒரு தனியார் மருத்துவமனைகளும் அதிக கட்டணம் வசூலித்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்களே அரசிடம் கூறி உள்ளோம். அதன்படி அரசும் அதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றது.
மேலும், தமிழ்நாடு முழுவதும் தளர்வுகள் கொண்ட ஊரடங்கு தான் தற்போது தேவை என்றும், மக்களிடம் அதிக விழிப்புணர்வு வந்துள்ளதால் ஊரடங்கில் தளர்வை ஏற்படுத்தலாம்" என்றார்.
இதையும் படிங்க...மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை - கருணாஸ்