ஈரோடு: திருப்பூர் நாச்சிபாளையத்தை சேர்ந்த கார்மென்ட்ஸ் ஊழியர் விஸ்வநாதனுக்கும், அவரது தூரத்து உறவினரான கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சந்தியாவிற்கும் கடந்த 2016-ல் பெற்றோர்கள் நிச்சயித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகித்த விஸ்வநாதன், அவருடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டுள்ளார். இதனால், குழந்தையை அழைத்துக்கொண்டு பெங்களூருவில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வதாக சந்தியா கூறி உள்ளார்.
தனியாக செல்ல வேண்டாம், தானே கொண்டு வந்து விடுவதாக கூறிய விஸ்வநாதன், மனைவி குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் திருப்பூரில் இருந்து பெங்களூருவிற்கு சென்றுள்ளனர். வழியில் பவானி காவிரி ஆற்று பாலத்தில் வண்டியை நிறுத்திய விஸ்வநாதன் குழந்தையிடம் விளையாடலாம் என அழைத்துச்சென்று பாலத்தின் மீது நின்றுள்ளார்.
காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் குழந்தையுடன் ஆற்றில் குதிக்க முயன்றுள்ளார். ஆனால், குழந்தையை சந்தியா பிடுங்கிக் கொண்டதால் விஸ்வநாதன் காவிரியில் குதித்து நீரில் மூழ்கினார். அதன் பின் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் தேடியும் கிடைக்காத நிலையில், சந்தியா தான் அணிந்திருந்த நகையை அடகு வைத்து, 16 கி.மீ. தொலைவிற்கு பரிசல் மூலம் தேடி உள்ளார்.
எனினும், இதுவரை விஸ்வநாதன் குறித்த தகவல் கிடைக்காமல் குழந்தையுடன் அல்லாடி வருகிறார். ரூ.10 லட்சம் கணவன் வாங்கிய கடனை கட்டச்சொல்லி கடன் கொடுத்தவர்கள் நிர்பந்திப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகிறார், சந்தியா. காவிரி வெள்ளத்தில் மூழ்கிய கணவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்த மனைவி சந்தியா, வங்கியிடம் கடன் பெற்றுள்ளதால் இறப்புச்சான்று வழங்கிட ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இதையும் படிங்க:Untouchability: புதுக்கோட்டை தீண்டாமை கொடுமை; நீதிமன்றத்தில் முறையீடு!