தமிழ்நாடு அரசு பொது நூலக துறையில் ஊர்ப்புற நூலக மாற்றுத்திறனாளிகள் சுமார் 200 பேர் கடந்த பத்தாண்டுகளாக மிக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இதில், ஊர்ப்புற நூலக மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு மூன்றாம் நிலை நூலகர் பணியை வழங்க கடந்த டிசம்பர் 11ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட மூன்றாம் நிலை நூலகர் பணிக்கு தற்போது காலியிடங்கள் 350க்கு மேல் உள்ளன. அதனால், காலியிடங்களில் ஊர்ப்புற நூலக மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு பணியை வழங்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து மார்ச் 2020 சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஊர்ப்புற நூலகங்களை தரம் உயர்த்தி, ஊர்ப்புற நூலகர்களை மூன்றாம்நிலை நூலகராகப் பதவி அளிக்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், கடந்த 15 ஆண்டாக தமிழ்நாட்டில் நூலகங்கள் தரம் உயர்த்தப்படாமல் உள்ளதாகவும், ஊர்ப்புற நூலகர்களின் பணி நிரந்தரப்படுத்தாமல் உள்ளதாகவும் கூறி ஊர்ப்புற நூலக மாற்றுத்திறனாளிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கேஏ செங்கோட்டையனை சந்திப்பதற்காக பிப்.12ஆம் தேதி காலை முதல் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் யூனியன் அலுவலகம் எதிரே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, மாலையில் ஊர்ப்புற நூலக மாற்றுத்திறனாளிகளை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் மனுக்களை பெற்றுக்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க...வண்ணாரப்பேட்டை-விம்கோ மெட்ரோ ரயில்! நாளை தொடங்கி வைக்கிறார் மோடி!