சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தலமலை, கேர்மாளம், மாவள்ளம், தொட்டபுரம், ஆசனூர் ஆகிய மலைக்கிராமங்களில் பல தனியார் சொகுசு விடுதிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கோடை துவங்கி விட்டால் தமிழ்நாடு கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இந்த சொகுசு விடுதிகளில் தங்கி செல்வது வழக்கம். ஆதேபோல் தற்போதும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர்.
குறிப்பாக தலமலை, ஆசனூரில் குளுகுளு காலநிலை நிலவுவதால் வெளியூர் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இயற்கையான சூழலில் உள்ள தலமலை கிராமத்தில் வெளியூர் பயணிகளால் கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் வெளியூர் பயணிகள் தலமலை கிராமத்தில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் சொகுசுவிடுதிளை தற்காலிகமாக மூட தலமலை ஊராட்சித் தலைவர் நாகன் அனைத்து சொகுசு விடுதிகளுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளார். அதேபோல், ஆசனூர் மலைகிராமத்தில் தங்கும் விடுதிகளில் வெளியூர் பயணிகள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆசனூர் ஊராட்சித் தலைவி சித்ரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.