ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான சாய தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றும் சாயக்கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் சில தொழிற்சாலைகளில் சாய கழிவுநீரை சுத்திகரிக்கப்படாமல் நீர்நிலைகளில் நேரடியாக கலந்துவிடப்படுகிறது.
கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சாய துணிகளை கொண்டு வந்து அலசி செல்கின்றனர். இது வாடிக்கையாக அங்கு நடந்து வருகிறது. ஆற்றில் கலக்கும் சாய கழிவுநீர் நேரடியாக வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், குழந்தைகளுக்கு நோய் பாதிக்கும் அபாயம் உள்ளன என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அலுவலர்களை பார்த்ததும் தப்பி ஓட்டம்
இந்நிலையில் நேற்று (செப்.25) இரவு 10 மணி அளவில் காவிரி கரையில் சிலர் சாய துணிகளை அலசுவதை பொதுமக்கள் பார்த்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்துள்ளனர். அலுவலர்கள் வருவதை பார்த்ததும் சாய துணிகளை அலசிக்கொண்டு இருந்தவர்கள் துணிகளை அங்கேயே விட்டுசென்று தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
பொதுமக்களுக்கு பாதிப்பு
இது குறித்து வழக்கறிஞர் கவின் கூறுகையில், "தினமும் 10, 20 வண்டிகளில் சாய துணிகளை கொண்டு வந்து ஆற்றில் நேரடியாக அலசுகின்றனர். இது வாடிக்கையாக நடந்துவருகிறது. இன்னும் காவிரி ஆற்றில் லட்சக்கணக்கான துணிகள் குவிந்திருக்கின்றன. இது பொதுமக்கள், குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தீபாவளி நெருங்குவதால் தொடர்ச்சியாக இச்சம்பவம் நடந்து வருகிறது" என்றார்.
அரசு நேரடியாக கண்காணிக்க கோரிக்கை
சமூக ஆர்வலர் தீனா பேசுகையில், தகவலின்பேரில் ஆற்றங்கரைக்கு சென்று பார்த்தோம். அங்கு டன் கணக்கில் துணிகளை அலசி கொண்டிருந்தார்கள்.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தொடர்புகொண்டோம். வழக்கம்போல் அவர்கள் பதிலளிக்க வில்லை. பின் வருவாய் கோட்டாட்சியரை தொடர்பு கொண்டு தெரிவித்தோம். ஈரோடு மாவட்டத்தில் கடந்த காலத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயலிழந்திருந்தது. இது தொடராமல் இருக்க தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை நேரடியாக கண்காணிக்க வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: பெண் காவல் ஆய்வாளரை மிரட்டும் பாமக எம்.எல்.ஏ. அருள்