ஈரோடு மாவட்டம் கடம்பூர் அடுத்த வைத்தியநாதபுரம் வனத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கடம்பூர் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி ஆய்வுசெய்தனர்.
கொலைசெய்யப்பட்ட நபரின் உடலில் ஆடைகள் இல்லாத நிலையில், காவல் துறையினர் அந்நபரின் உடலிலுள்ள அடையாளங்களைப் பதிவுசெய்தனர். கையில் பச்சை குத்தியிருப்பதால் இறந்தவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என கர்நாடக காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இரு மாநில எல்லையில் அமைந்துள்ள கிராமத்தில் கொலை நடந்துள்ளதால், கொலையாளி கர்நாடகத்துக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இதையடுத்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை சம்பவயிடத்தை நேரில் ஆய்வுசெய்து, கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இக்கொலைச் சம்பவத்தின் எதிரொலியாக, கடம்பூரிலிருந்து கேர்மாளம் செல்லும் வாகன ஓட்டிகள் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்றும், வனத் துறையினர் சோதனைக்குப் பின்னரே சாலையில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்றும் வனத் துறையினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:மீண்டும் எச்சரிக்கை வாசகம்: இம்முறை காவல் நிலையம் சுவர்!