ஈரோடு: பெரியார் நகர் அசோகபுரியை சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன்-கவிதா தம்பதி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் இத்தம்பதியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை உறவினர் வீட்டு சுபகாரியத்திற்கு ராமச்சந்திரன் தனது மனைவி கவிதா இரண்டு மகன்களுடன் சென்றுள்ளார்.
உணவுப் பொருட்களை வாங்க ராமச்சந்திரன் வெளியே சென்ற நிலையில், கவிதா தனது மகன்களை விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் ராமச்சந்திரன் கவிதாவுடன் செல்போனில் பேசியுள்ளார். அதற்கு கவிதா, நான் வெளியே சென்றுள்ளேன்; மாலை வருகிறேன் என தெரிவித்துள்ளார். ஆனால், மூன்று நாட்கள் ஆகியும் கவிதா வீட்டிற்கு திரும்பவில்லை. கவிதாவின் செல்போன் எண்ணுக்கு மீண்டும் ராமச்சந்திரன் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது கவிதா தான் அருணாச்சலம் உடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ராமச்சந்திரன் காவல் நிலையத்தில் தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவர் மீண்டும் புகார் மனு அளித்துள்ளார். ஆனால், அப்போதும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் மனமுடைந்த ராமச்சந்திரன், இன்று (ஆக.9) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது மகன்களுடன் வந்தார். இதையடுத்து அவர் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
காவல் துறையினர் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் ராமச்சந்திரன் தனது மகன்களை அணைத்துக் கொண்டு உடனடியாக தனது மனைவி காணாமல் போனது குறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு அவர் போராட்டத்தை கைவிட்டார்.
இதையும் படிங்க: மது வாங்க ஜெனரேட்டரின் செம்பு கம்பியை திருடிய நபர் கைது