ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் அருகே ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்ற ஒரு பெண்ணின் புகைப்படத்தை மோசடி கும்பல் ஒன்று, மார்பிங் செய்து அதை அவரது உறவினர்களுக்கு அனுப்பிய நிலையில் மனமுடைந்த அப்பெண் மாயமாகினார். இந்நிலையில், மாயமான தன் மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி அவரது கணவன் நம்பியூர் காவல்நிலையத்தில் இன்று (டிச.21) புகார் அளித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் இருகாலூர் பகுதியைச் சேர்ந்தவர் டிரைவர் வெங்கடாச்சலம் என்பவரது மனைவி மோகனசுந்தரி. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், வெங்கடாசலம் காணாமல்போன தனது மனைவியை கண்டுபிடிக்க கோரி நம்பியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளளர்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரில், 'தன் மனைவி மோகனசுந்தரி ஆன்லைன் செயலி மூலமாக கடன் பெற்றிருந்ததாகவும், ஆன்லைன் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் மோகனசுந்தரியின் செல்போனை ஹேக் செய்து அதில் இருந்த அனைத்து போன் நம்பர்களையும் எடுத்து அனைவருக்கும் அவரது போட்டோவை மார்பிங் செய்து அனுப்பியுள்ளதாவும், இதனால் அதிர்ச்சி அடைந்த மோகனசுந்தரி மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இதனிடையே நேற்று தனது தனது மூத்த மகனிடம் கோயிலுக்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு, சென்ற மோகனசுந்தரி வீடு திரும்பவில்லை எனவும், உறவினர்கள் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் தேடியும் அவர் கிடைக்காததால் காணமல்போன தன் மனைவியை கண்டுபிடித்து தர வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட ஆன்லைன் செயலி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு ஆன்லைனில் லோன் தருவதாகக் கூறிடும் லோன் மோசடி கும்பலை நம்பி பெண்கள் மட்டுமில்லை யாரும் ஏமாற வேண்டாம். இந்த மாதிரியான விவகாரங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதை அனைவரும் மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: ‘செய்யும் தொழிலே தெய்வம்’ - தூய்மைப் பணியாளர் சீருடையுடனே உயிரிழந்த பெண்; நெகிழ்வு சம்பவம்