ஈரோடு அருகேயுள்ள திண்டல் சிவன் நகர் பகுதியில் வசித்து வரும் வாசுதேவன் என்பவர் பால் உற்பத்தி நிலையத்தை நடத்தி, கேரள மாநிலம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
இவர் வீட்டில் நிகழ்ந்த திருமண நிகழ்வைத் தொடந்து, கடந்த மாதம் 30ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்குச் சென்றார். பின்னர், ஜூன் 1ஆம் தேதி வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 55 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், இது குறித்து ஈரோடு தாலூக்கா காவல்நிலையத்திற்கு புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அருகாமை வீட்டிலிருந்த கண்காணிப்புக் கேமராவில் தொடர்பில்லாத சிலர் நள்ளிரவில் அவ்வீதிக்குள் வருவதும், மூட்டையுடன் செல்வதுமாக பதிவாகியிருந்த காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
பின்னர் காவல்துறையினர் நடத்திய ஆய்வில், நகை கொள்ளையர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த அண்ணா என்பதும், அவருக்கு உதவியாக அவரது மனைவி பாண்டியம்மாள் இருந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட காவல்துறையினர் தலைமறைவாக இருந்த இருவரையும் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் ஈரோடு மாவட்டம் பவானியிலுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது. அதன் பின்னர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 44 சவரன் தங்க நகைகளும், 17 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: 7 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் - ஒன்றரை ஆண்டுகளாக தப்பிய கும்பல் சிக்கியது!