ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த பழைய ஆசனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசாரி ஈரம்பதம்படி (60). இவரது மனைவி செளபாக்யா. இவர்கள் கோயில் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், பூசாரி தனது மனைவியுடன் கோயில் நிலத்தில் விவசாயம் செய்வதற்கு சென்றுள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த சிவசாமி, அவரது மனைவி மாதலாம்பிகா ஆகியோர் பூசாரியிடம் கோயில் நிலத்தில் விவசாயம் செய்யக்கூடாது என தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறில் பூசாரி ஈரம்பதம்பாடியை, மாதலாம்பிகா காலணியால் அடித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பூசாரியும் அவரது மனைவி செளபாக்கயாவும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதனடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பூசாரிக்கு ஆதரவாக 200க்கும் மேற்பட்ட மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து காவல் துறையினர் பூசாரியை தாக்கிய சிவசாமி, மாதலாம்பிகா ஆகிய இருவரையும் கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையும் படிங்க: ராமர் கோயிலை விரைவாகக் கட்ட வேண்டி புதுச்சேரியில் பூஜை