ஈரோடு: பெருந்துறையை அருகே உள்ள துடுப்பதி பாலக்கரை பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக கீதாராணி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் மாணவர்கள் ஆசிரியை தங்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக பேசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
மேலும், பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பெருந்துறை காவல் நிலையத்திலும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பெருந்துறை காவல் துறையினர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பள்ளி தலைமை ஆசிரியர் கீதா ராணி, மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்ததாக இருந்த புகார் உறுதி செய்யப்பட்டு, பள்ளி தலைமை ஆசிரியர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், மாணவர்களை வேலை செய்ய வைத்தது, பாதிப்பு ஏற்படுத்தும் ரசாயனங்களை மாணவர்கள் இடத்தில் கொடுத்து கழிவறையை சுத்தம் செய்ய வைத்தது என நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையறிந்த தலைமை ஆசிரியை கீதாராணி தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் தனிப்படை அமைத்து பள்ளி தலைமை ஆசிரியை தேடி வந்தனர். இந்நிலையில் இரவு நேரத்தில் தனது உடைமைகளை எடுப்பதற்காக வீட்டிற்கு வந்த பள்ளி தலைமை ஆசிரியை வந்தார். இதனையறிந்து சம்பவ் இடத்திற்குச் சென்று காத்திருந்த காவல் துறையினர், ஆசிரியரை கைது செய்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை கீதா ராணி ஈரோடு மகிலா நீதிமன்ற நீதிபதி மாலதி முன்பு ஆஜர் படுத்தினர். நீதிபதி 15 நாள் சிறை காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து தலைமை ஆசிரியர் கீதாராணி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: ஆண் நண்பர்களுடன் சேர்ந்து காதலனை கொலை செய்த முன்னாள் காதலி...