ஈரோடு மாவட்டம் நசியனூரைச் சேர்ந்தவர் டாஸ்மாக் ஊழியர் ராஜேந்திரன். இவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரம்மக்கமலம் பூச்செடியை தனது வீட்டில் நட்டுவைத்துள்ளார். தற்போது சமீபத்தில் மொட்டாக இருந்த நான்கு பிரம்ம கமலம் பூக்களும் பூத்தன. பிரம்மக்கமல மலர்கள் சுமார் ஐந்து அங்குலத்துக்கு இதழ்களை விரித்து காட்சியளித்து காண்போரைப் பரவசப்படுத்துகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இரவில் மலரக்கூடிய அபூர்வ வகை மலர் பிரம்மக்கமலம். இமயமலையின் ஒரு சில சிகரங்களில் மட்டும் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும். இரவில் மலர்ந்த மலரானது சில மணிநேரங்களில் மீண்டும் குவிந்துவிட்டது. வீட்டில் பூத்த அபூர்வ வகை மலரான பிரம்மக்கமலம் பூவை அப்பகுதி மக்கள் ஆச்சர்யமாகப் பார்த்துச்சென்றனர்.
இது குறித்து ராஜேந்திரனின் மனைவி சரண்யா கூறுகையில், “பிரம்மனின் நாபிக் கமலத்திலிருந்து பூப்பதுபோல தோற்றமளிப்பதால், இதற்கு பிரம்மக்கமலம் எனப் பெயர் வந்தது. தெய்வீக சக்தியுடையது. இந்த மலர் இமயமலைப் பகுதிகளில் மட்டுமே காணக்கிடைக்கும். இவை ஈரோட்டில் பூத்திருப்பது மிகுந்த மன நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை இரவு 10 மணிக்கு பூக்கும். காலை 5 மணிக்கு முழுவதுமாக வாடி, பூ இருந்ததற்கான அடையாளங்களே இருக்காது. இந்த அதிசய பூவின் நடுவில் பார்த்தால் பிரம்மா படுத்திருப்பது போலவே இருக்கும். அதன் வாசம் மிக அருமையாக இருக்கும். சந்தனம் கலந்த பூவின் வாசம் அது” என்றார்.
இதையும் படிங்க : மரபு வேளாண் உத்திகள் தமிழ்நாட்டில் முழுவீச்சில் செயல்படுத்தப்படும் - கு. சிவராமன்