ஈரோடு: ஈரோடு காந்திஜி சாலையில் புதுப்பிக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் கடை நேற்று(ஜூன் 21) திறந்து வைக்கப்பட்டது. தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இருவரும் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி கடையைத் திறந்து வைத்தனர். பின்னர் கடையில் விற்பனையையும் தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காந்தி, "தமிழ்நாட்டில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சுமார் 85 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பு ஏற்கும் போது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சுமார் 7 கோடி ரூபாய் வருமான இழப்பில் இருந்தது. ஆனால், நாங்கள் பொறுப்பேற்ற பிறகு முதல் ஆண்டிலேயே அந்த இழப்பை சரி செய்துவிட்டு, சுமார் ரூ.10 லட்சம் லாபம் ஈட்டினோம்.
அதேபோல் கோ-ஆப்டெக்ஸில் விற்பனை அதிகரித்துள்ளது. பல கோஆப்டெக்ஸ் கடைகளை புதுப்பித்து திறந்து வைத்துள்ளோம். அந்த கடைகளில் விற்பனை இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்களின் தேவையும் வேறுபடும். அதனால், அந்தந்த பகுதி மக்களுக்கு ஏற்றார்போல் புதிய டிசைன்களை உருவாக்கியுள்ளோம்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சுமார் ஆயிரம் புதிய டிசைன்களை உருவாக்கியுள்ளோம். இந்த ஆண்டு கோப்டெக்ஸ் வருவாயை இரண்டு மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் முன் கூட்டியே தொடங்கப்படும்.
இத்திட்டத்திற்கான பணிகள் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும். ஜனவரி 2ஆம் தேதி முதல் மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்படும், பொங்கல் பண்டிகைக்கு முன்பே மக்களுக்கு சென்று சேரும். தரமான வேட்டி சேலை வழங்கப்படும்.
கடந்த முறை தாமதம் என்றுதான் கூறினார்களே தவிர, தரத்தில் எந்த குறையும் இல்லை. கடந்த ஆண்டை விட இந்தாண்டு தரம் இன்னும் சிறப்பாக இருக்கும். இந்த முறையும் வேட்டி சேலைகளில் புதிய டிசைன்கள் இருக்கும். இந்தாண்டு கைத்தறி நெசவாளர்கள் கூலி 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டு உள்ளது.
கோஆப்டெக்ஸில் 487 ஒப்பந்தப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே உள்ள நிரந்தரப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் ஏற்றுமதி குறைந்துவிட்டது, அதனால்தான் ஈரோடு சென்னிமலை உள்ளிட்டப் பகுதிகளில் போர்வைகள் தேங்கியுள்ளன" என்று கூறினார்.
இதையும் படிங்க: பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை விதிகளில் மாற்றம் - உயர் கல்வித்துறை முடிவு