தமிழ்நாட்டில் போதைப்பொருள்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு மாநில எல்லையான பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக குட்கா, ஹான்ஸ், போதைபாக்குகள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து பண்ணாரி சோதனைச்சாவடியில் காவல் துறையினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது மாநில எல்லையான கோழிப்பள்ளத்தில் இருந்து பருத்திக்கொட்டைகள் ஏற்றி வந்த 2 டெம்போவை காவல் துறையினர் ஆய்வுசெய்தனர். அதில் கடத்திவரப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற போதைப்பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து டெம்போவை பறிமுதல் செய்து ஓட்டுநர்கள் பால்கோட்டைச் சேர்ந்த சல்மான் முகமது, திருச்சி தொட்டியத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஆகியோரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
பறிமுதல்செய்த போதைபாக்குகளை சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் வைத்து ஆய்வு செய்தபோது 56 மூட்டைகளில் ரூ.14 லட்சம் மதிப்பிலான போதைபாக்குகளும், மற்றொரு லாரியில் ரூ.9 லட்சம் மதிப்பிலான 43 மூட்டைகளில் குட்கா, ஹான்ஸ் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் வெங்கடேஸ், பால்பிரகாஷ் ஆகியோரை காவல் துறையினர் தேடிவருகின்றனர். ஒவ்வொரு முறை கடத்திலின்போது ரூ.3 ஆயிரம் கூடுதலாக தருவதாக ஆசை வார்த்தைக் கூறி டெம்போ ஓட்டுநர்களை கடத்தலுக்கு பயன்படுத்தியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கும் கரோனா உயிரிழப்பு