ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொங்கள்ளி வனப்பகுதியில் மல்லிகார்ஜூனசாமி கோயில் குண்டம் திருவிழா நேற்றிரவு (மார்ச். 14) சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகாவின் சாம்ராஜ்நகர், மைசூர், மாண்டியா, குண்டல்பேட்டை பகுதிகளிலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்நாடக பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இன்று (மார்ச். 15) சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மலர்சப்பரத்தில் உற்சவர் கோயிலை வலம் வந்து குளத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு உற்சவருக்கு புனிதநீராடி மீண்டும் கோயிலுக்கு அழைத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து, கோயில் பூசாரி கதியப்பதேவர் 21 அடி குண்டத்தில் இறங்கி நடந்து வந்தார். அப்போது, பக்தர்கள் குண்டத்தை பார்த்து வழிபட்டனர். இக்கோயில் பூசாரி ஒருவர் மட்டுமே குண்டம் இறங்குவது ஐதீகம் என்பதால் பக்தர்களுக்கு அனுமதியில்லை.
இதுதவிர, கோயிலுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு முன்னால் பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். கோயில் விழாவில் பெண்கள் கலந்துகொள்வதில்லை. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தாளவாடி காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க: 'பீஸ்ட்' படத்திற்கு இசை வெளியீட்டு விழா இல்லையா? சோகத்தில் ரசிகர்கள்..!